வேலைக்கார பெண் சாவு வழக்கில் திருப்பம்: கள்ளக்காதல் தகராறில் வீட்டு உரிமையாளரே கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலம்


வேலைக்கார பெண் சாவு வழக்கில் திருப்பம்: கள்ளக்காதல் தகராறில் வீட்டு உரிமையாளரே கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலம்
x

செங்குன்றம் அருகே வேலைக்கார பெண் இறந்த வழக்கில் வீட்டு உரிமையாளரே கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

சென்னை

செங்குன்றத்தை அடுத்த கிராண்ட்லைன் கரிகால சோழன் நகரை சேர்ந்தவர் நாதன் (வயது 65). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரான இவர், திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் தடா பகுதியைச் சேர்ந்த அற்புதம்மாள் (50) என்பவரை வீட்டு வேலைக்கு அமர்த்தினார். அவர் அங்கு இரண்டு ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்த நிலையில், கடந்த 26-ந்தேதி அன்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, செங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு நாதன் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அற்புதம்மாள் சாவு குறித்து வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் நாதனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அற்புதம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில் அவர்கள் இருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததும், திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமான ஏற்பட்ட தகராறில், அற்புதம்மாளை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய செங்குன்றம் போலீசார் நாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story