சென்னை அருகே போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை


சென்னை அருகே போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 1 Aug 2023 11:15 PM GMT (Updated: 1 Aug 2023 11:15 PM GMT)

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருவரும் பல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

வாகன சோதனை

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் காரணைபுதுச்சேரி-அருங்கால் செல்லும் பாதையில் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் உள்ளிட்ட போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை 3.30 மணியளவில் கீரப்பாக்கத்தில் இருந்து காரணைபுதுச்சேரி நோக்கி சொகுசு கார் ஒன்று வந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த காரை வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற போலீஸ் வாகனம் மீது அந்த கார் மோதியது. அப்போது அவர்களை போலீசார் சுற்றி வளைக்க முயன்றனர்.

சப்-இன்ஸ்பெக்டருக்கு வெட்டு

உடனே காரில் இருந்து 4 பேர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கீழே இறங்கினர். இதனால் போலீசார் திகைத்து போனார்கள். அவர்களை போலீசார் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று எச்சரித்தனர். இருப்பினும் அவர்கள் 4 பேரும், போலீசாரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். அந்த கும்பல் அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதனை வெட்டினர். இதில் அவரது இடது கையில் வெட்டுக்காயம் விழுந்தது. தலையில் அவரை வெட்ட முயற்சித்தபோது, சுதாரித்து கொண்டதால் சப்-இன்ஸ்பெக்டர் உயிர்தப்பியதாக கூறப்படுகிறது.

2 பேர் சுட்டுக்கொலை

இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் ஆகியோர் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த 4 பேரை நோக்கி சுட தொடங்கினார்கள். இதனை அறிந்த 4 பேரும் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அவர்களை போலீசார் துரத்தி பிடிக்க முயன்றனர்.

அப்போது 2 பேரை போலீசார் விரட்டி சென்று துப்பாக்கியால் 2 ரவுண்டு சுட்டனர். இதில் குண்டு பாய்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் அவர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பிரபல ரவுடிகள்

போலீசார் தரப்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த 4 பேரும் ரவுடிகள் என்பது தெரியவந்துள்ளது. அதில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பேர் பிரபல ரவுடிகளாக வலம் வந்து இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மண்ணிவாக்கம், சுவாமி விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்த வினோத் என்ற சோட்டா வினோத்(வயது39) என்பதும், ஓட்டேரி போலீஸ் நிலைய சரித்திர பதிவேட்டில் 'ஏ பிளஸ்' பிரிவில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதில் 10 கொலை, 16 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 16 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மற்றொருவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ரமேஷ்(32) என்பதும், இவர் சோட்டா வினோத்தின் கூட்டாளியாக இருந்து, மண்ணிவாக்கத்தில் கருமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இவர் மீதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கவுண்ட்டர் சம்பவம்

கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி ஊரப்பாக்கம் ஆதனூரை சேர்ந்த தி.மு.க. நிர்வாகியும், தொழில் அதிபருமான சக்கரபாணியிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், அவர் கொடுக்க மறுத்ததால் வீட்டு வாசலில் அவரை சரமாரியாக வெட்டியதாகவும், வெட்டப்பட்ட சக்கரபாணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதுதொடர்பான வழக்கில், இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்த வழக்கின் விசாரணையில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய 2 ரவுடிகள் முக்கிய குற்றவாளியாக இருந்திருக்கின்றனர் என்பதும் மணிமங்கலம் போலீசார் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், சமீப காலங்களாக பல்வேறு கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் இந்த ரவுடிகள் ஈடுபட்ட தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில்தான் இந்த என்கவுண்ட்டர் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விசாரணைக்கு உத்தரவு

இதையடுத்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் போலீஸ் கமிஷனர் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கின்றனர். மிக விரைவாக அவர்களும் கைது செய்யப்படுவார்கள். காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆஸ்பத்திரியில் நலமுடன் இருக்கிறார்' என்றார்.

பரபரப்பு

அதிகாலை 3.30 மணிக்கு பயங்கர ஆயுதங்களுடன் 4 ரவுடிகள் சென்றதன் நோக்கம் என்ன? யாரை கொலை செய்யும் நோக்கில் சென்றார்களா? போலீசாரை கண்டதும் இறங்கி அவர்களை தாக்க முயற்சித்தற்கான காரணம் என்ன? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு, தப்பியோடிய அந்த 2 பேர் பிடிபட்ட பிறகுதான் விடை கிடைக்கும். தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை அருகே நடந்த இந்த என்கவுண்ட்டர் சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story