தடுப்புச்சுவரில் பைக் மோதி 2 பேர் பலி: நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பிய போது பரிதாபம்


தடுப்புச்சுவரில் பைக் மோதி 2 பேர் பலி: நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பிய போது பரிதாபம்
x

நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பிய போது தடுப்புச்சுவரில் பைக் மோதி 2 பேர் பலியானார்கள்.

சென்னை

சென்னை:

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆரனேரி பகுதியில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 31). இவரது நண்பர் கருணாகரன் (29). பாலகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தனியார் கண்ணாடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கருணாகரன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு காஞ்சீபுரத்தில் நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து பைக்கில் சொந்த ஊருக்கு ஏனாத்தூர் வழியாக சென்று கொண்டு இருந்தபோது பைக் அங்கு இருந்த தரைப்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது.

இதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். பாலத்தின் கீழே தண்ணீர் தேங்கி இருந்ததால் அதில் மூழ்கி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலகிருஷ்ணனின் உடலை மீட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கருணாகரனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருணாகரன் உயிரிழந்தார்.

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வீட்டுக்கு திரும்பும் போது நண்பர்கள் 2 பேர் விபத்தில் மரணம் அடைந்த சம்பவம் ஆரனேரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story