சென்னை அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; மூச்சு திணறி 2 பெண்கள் பலி


சென்னை அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; மூச்சு திணறி 2 பெண்கள் பலி
x

சென்னை அசோக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறி 2 பெண்கள் பலியானார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பில் தீ

சென்னை அசோக் நகர் 12-வது அவென்யூவை சேர்ந்தவர் ஜெயா (வயது 70). இவர் தனது தாயார் ஜானகியுடன் (92) அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் வசித்து வந்தார். மூதாட்டி ஜானகிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்து கொள்ள போரூரை சேர்ந்த ஜெயப்பிரியா (27) என்பவர் உடனிருந்தார்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தாயார் ஜானகி மற்றும் ஜெயப்பிரியா ஆகியோர் படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்தனர். ஜெயா வீட்டின் ஹாலில் படுத்திருந்தார். இந்தநிலையில் நள்ளிரவில் அவர்களது வீட்டில் திடீரென கரும்புகை பரவியது. தொடர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. வீடு முழுவதும் கரும்புகை பரவியதால் அதில் சிக்கிக்கொண்ட 3 பேரும் கூச்சலிட்டனர்.

இதற்கிடையே அதே அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் வசித்து வந்த குடும்பங்கள் இவர்களது அலறல் சத்தம் கேட்டு வெளியே திரண்டனர். குடியிருப்பு முழுவதும் கரும்புகையால் சூழ்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ஜன்னலை உடைத்து..

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்க முயன்றனர். குடியிருப்பில் முன்பகுதியில் கரும்புகை அதிகளவில் பரவி இருந்ததால், வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சமையல் அறையில் எரிந்த தீயை முதலில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

இதையடுத்து வீட்டின் இதர அறைகளை சோதனையிட்ட போது ஜானகி மயக்கமடைந்த நிலையில் இருப்பதை கண்டனர். அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே மேலும் 2 பேர் இருப்பதாக கூறினர். உடனே தீயணைப்பு வீரர்கள் வீட்டின் முன்பகுதி வழியே உள்ளே விரைந்தனர்.

2 பெண்கள் பலி

அங்கு ஹாலின் ஒரு பகுதியில் ஜெயா இருப்பதை கண்டு, அவரை மீட்டு பத்திரமாக வெளியேற்றினர். அதேபோல் வீட்டின் படுக்கை அறையில் ஜெயப்பிரியா மூச்சுதிணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி ஜானகியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி கூறுகையில், 'இந்த விபத்தில் யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. கரும்புகையால் மூச்சுதிணறல் மட்டுமே ஏற்பட்டது.

வீட்டின் சமையல் அறையில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் (பிரிட்ஜ்) மின்கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்து இருக்கலாம்' என தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story