புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு மதுரையிலிருந்து காசிக்கு 'உலா ரெயில்' சேவை - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு மதுரையிலிருந்து காசிக்கு உலா ரெயில் சேவை - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு மதுரையிலிருந்து காசிக்கு ‘உலா ரெயில்’ சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

செங்கோட்டை,

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மஹாளய அமாவாசை மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது. இந்நன்நாளில் ஏராளமானோர் காசிக்கு சென்று முன்னோர்களுக்காக வழிபட்டு வருவார்கள். இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே துறை சார்பில் மதுரை - காசி இடையே உலா ரெயில் என்ற பெயரில் ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்க இருக்கிறது.

இந்த ரெயில் மதுரையிலிருந்து செப்டம்பர்-22 அன்று புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை வழியாக காசி செல்கிறது. மகாளய அமாவாசை தினத்தன்று பிராயக் திருவேணி சங்கமத்தில் புனித நீராடி, கயா விஷ்ணுபாத ஆலயத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்பு காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, அயோத்தி ராம ஜென்ம பூமி ஆலயங்களில் தரிசனம், நைமிசாரண்யம் சக்கர தீர்த்தத்தில் நீராடி திவ்யதேச தேவராஜ பெருமாள் தரிசனம், ஹரித்வார் கங்கையில் நீராடி மானசா தேவி தரிசனம், டெல்லி அக்சர் தாம் சுவாமி நாராயண், மதுரா கிருஷ்ண பூமி கோவர்த்தன தேச பெருமாள் மற்றும் நவ மோகன கிருஷ்ண பெருமாள் ஆலயங்கள் தரிசனத்தோடு சுற்றுலா நிறைவடைகிறது.

இந்த ரயில்களில் 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 நவீன சமையல் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த 12 நாள் சுற்றுலாவுக்கு அளிக்கப்படும் வசதிகளுக்கு ஏற்ப தனி நபராக ஒருவர் பயணம் செய்தால் ரூ. 38600 மற்றும் ரூ.46200 ஆகிய கட்டணங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

குழுவாக அல்லது குடும்பமாக இருவர் அல்லது மூவர் பயணம் செய்தால் நபர் ஒருவருக்கு ரூ. 8000 முதல் ரூ.4000 வரை கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. குறைந்த வசதிகளுடன் மூவர் பயணம் செய்தால் அவர் ஒருவருக்கு ரூ.24900 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த ரெயில்களுக்கு பயண சீட்டு பதிவு செய்ய www.ularail.com என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


Next Story