தாய் இறந்த துக்கம் தாங்காமல் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை


தாய் இறந்த துக்கம் தாங்காமல் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை
x

தாய் இறந்த துக்கம் தாங்காமல் என்ஜினீயரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர், ராணுவ ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி நாகேஸ்வரி (வயது 57). இவர்களுக்கு நவீன் (34), விவேக் (32) என 2 மகன்கள்.

இவர்களில் நவீன், தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரான 2-வது மகன் விவேக், தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்துள்ளார்.

2 மகன்களுக்கும் 30 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகவில்லை என்று நாகேஸ்வரி மன வருத்தத்தில் இருந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விரைவில் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நாகேஸ்வரி அடிக்கடி தனது கணவரிடம் கூறி வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் மகன்களின் திருமணம் தொடர்பாக நாகேஸ்வரி தனது கணவரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது மனைவியை கண்டித்த அசோகன், பின்னர் வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.

ஏற்கனவே மகன்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்று மனவேதனையில் இருந்த நாகேஸ்வரி திடீரென சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை எடுத்துக்கொண்டு 2-வது மாடிக்கு சென்று தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய நாகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நேற்று முன்தினம் மாலை நாகேஸ்வரியின் இறுதிச்சடங்கு நடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டது. இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தாய் இறந்த துக்கம் தாங்காமல் 2-வது மகன் விவேக் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சென்றனர். எனினும் தாயின் இழப்பை விவேக்கால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்த விவேக் திடீரென எழுந்து மண்எண்ணெய் கேனுடன் காசிேமடு பகுதியில் உள்ள நாகூர் தோட்டம் பகுதிக்கு சென்றார். அங்குள்ள காலி இடத்தில் அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய விவேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார், விவேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதிக பாசம்

விவேக் தனது தாய் நாகேஸ்வரி மீது அதிக பாசம் வைத்து இருந்தார். தாய் தீக்குளித்தபோது வீட்டில் இருந்த விவேக், தாயின் உடலில் தீப்பிடித்து எரிவதையும், வலியால் அவர் அலறியதையும் நேரில் பார்த்து கதறி துடித்தார். இதனால் தாயின் நினைவில் அவர் மனவேதனையில் இருந்து உள்ளார். இதனாலேயே நேற்று காலை விவேக்கும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக காசிமேடு மீன்பிடித்துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய்-மகன் அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story