அரகண்டநல்லூரில் திறப்பு விழா காணாத சார்பதிவாளர் கட்டிடம்: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
அரகண்டநல்லூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா காணாமல் உள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலூர்,
சார்பதிவாளர் கட்டிடம்
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த கட்டிடம் பலத்த சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகுவதால், முக்கிய ஆவணங்கள் சேதமடைந்து வருகிறது. மேலும் போதுமான இடவசதிகளும் இல்லை. இதனால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையேற்று புதியதாக சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டது.
1½ கோடி மதிப்பில்...
அதன்படி ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் அரகண்டநல்லூரில் செயல்பட்டு வரும் பழைய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் அருகிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய கட்டிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை திறக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால், பழைய சார்பதிவாளர் அலுவலகத்தில் தண்ணீர் ஒழுகி முக்கிய ஆவணங்கள் வீணாகும் அபாயம் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதிக வருவாய் தரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அரகண்டநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகம் ஆகும்.
பயன்பாட்டிற்கு வருமா?
இருப்பினும் இந்த அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.