பிரதமரின் முயற்சியால் இந்தியா வேகமாக துடிப்புடன் முன்னேறி வருகிறது - மத்திய இணை மந்திரி எல். முருகன்


பிரதமரின் முயற்சியால் இந்தியா வேகமாக துடிப்புடன் முன்னேறி வருகிறது - மத்திய இணை மந்திரி எல். முருகன்
x

நாமக்கல்லில் தமிழகத்தின் அறியப்படாத இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை இன்று மத்திய இணை மந்திரி டாக்டர் எல். முருகன் திறந்து வைத்தார்.

நாமக்கல்:

இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின், மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல அலுவலகத்தின் மூலம் இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு அமிர்தப் பெருவிழா நாமக்கல்லில் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

அதையொட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல்.முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் என்ற நூலை எல்.முருகன் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி முருகன் பேசியாதவது:-

வருகிற 2047-ம் ஆண்டு இந்தியா நூற்றாண்டு சுதந்திர தின ஆண்டை கொண்டாட உள்ளது. அப்போது உலக நாடுகளுக்கு முன்னோடி நாடாக இந்தியா திகழ வேண்டும். அதற்காக வரும் 25 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு இந்தியனும் உழைக்க வேண்டும் என பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். கடந்த 2014-ம் ஆண்டிற்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது?. பின்னர் கடந்த 8 ஆண்டில் நாடு எவ்வளவு முன்னேறி உள்ளது என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

வீடுகள் தோறும் கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம் 6 ஆண்டில் நமது நாடு தூய்மை இந்தியாவாகி உள்ளது. மேலும் 200 கோடிக்கு மேலான கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசால் இலவசமாக கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பிரதமர் மோடி தற்சார்பு இந்தியாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பிரதமரின் முயற்சியால் இந்திய நாடு வேகமாக துடிப்புடன் முன்னேறி வருகிறது என அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.யும், பா.ஜ.க. மாநில துணைத்தலைவருமான கே.பி.ராமலிங்கம், சென்னை மத்திய மக்கள் தொடர்பக இயக்குனர் காமராஜ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, துணைத்தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலாளர்கள் வடிவேல், சத்யபானு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், நகர தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story