மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு


மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு
x
தினத்தந்தி 12 Oct 2023 9:30 PM GMT (Updated: 12 Oct 2023 9:30 PM GMT)

கூடலூர், பந்தலூரில் மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

நீலகிரி

கூடலூர், பந்தலூரில் மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

நீலகிரியில் சுற்றுப்பயணம்

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் நேற்று முன்தினம் ஊட்டியில் தனது முகாம் அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் குன்னூரில் நடந்த புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நேற்று மசினகுடி, கூடலூர், ஓவேலி ஆகிய பகுதிகளுக்கு வந்த மத்திய மந்திரி எல்.முருகன், அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். மேலும் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்றார்.

அவரை துணை இயக்குனர் வித்யா மற்றும் வனத்துறையினர் வரவேற்றனர். பின்னர் வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகள் மற்றும் பழங்களை அவர் வழங்கினார். தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற ஆவண படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளியை வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கோரிக்கை மனுக்கள்

இதைத்தொடர்ந்து பந்தலூருக்கு சென்ற மத்திய மந்திரி எல்.முருகன், நெல்லியாளம்பதி, சன்னகொல்லி, அய்யன்கொல்லி பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட மத்திய மந்திரி எல்.முருகன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

பின்னர் பந்தலூரில் நடந்த நெல்லியாளம் நகர நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து அவரது முன்னிலையில் கொளப்பள்ளியில் தே.மு.தி.க. நிர்வாகி அசோக்குமார் தலைமையில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.


Next Story