தி.மு.க.-காங்கிரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்
ஊழலின் மொத்த உருவமாக இருக்கும் தி.மு.க.-காங்கிரசை வரும் காலத்தில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.
திருப்பூர்,
ஊழலின் மொத்த உருவமாக இருக்கும் தி.மு.க.-காங்கிரசை வரும் காலத்தில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.
ஊழல் இல்லாத தமிழகம்
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் நடைபயணத்தை நேற்று காலை திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தொடங்கினார். நடைபயணம் நிறைவு பெற்று நடந்த கூட்டத்தில் ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் பேசியதாவது:-
ஊழலை ஒழித்தாக வேண்டும் என்ற உறுதிமொழியை பிரதமர் மோடி ஏற்று செயல்படுத்தி வருகிறார். ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு முனைப்புடன் இருக்கிறார். இந்த நாட்டில் அதிகமாக ஊழல் புரிகின்ற கட்சி தி.மு.க. தான். தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் தமிழகத்தில் ஊழல் இருமடங்காக பெருகிவிட்டது. மகன், மருமகன் இருவரும் ஊழல் செய்து வருகிறார்கள். சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. வளர்ச்சி, முன்னேற்றம் இல்லை.
விசைத்தறி தொழில் மின்கட்டண உயர்வால் வளராமல் உள்ளது. நெசவாளர்களுக்கு மின்சாரம் இல்லை. தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். அவினாசியில் 24 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை தான் சேவையாற்றி வருகிறது. தற்போது 100 படுக்கைகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
செங்கோல்
காங்கிரஸ் காலத்தில் ஜவகர்லால் நேரு அவருடைய வீட்டில் செங்கோலை பதுக்கி வைத்திருந்தார்கள். அவர்கள் நடந்து செல்வதற்கான கைத்தடி போல பயன்படுத்தி அவமானப்படுத்தினார்கள். ஊழலின் மொத்த உருவாக இருக்கும் தி.மு.க. மற்றும் அதற்கு ஊதுகுழலாக இருக்கிற காங்கிரசை வரும் காலத்தில் தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். தோற்கடிப்பார்கள். ஆட்சியை இழக்க செய்வார்கள்.
உங்களுக்கு முன்னேற்றம் வேண்டுமா, ஊழல் வேண்டுமா. ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் இந்த பாராளுன்ற தொகுதி எம்.பி. ஆ.ராசாவின் சட்டத்துக்கு புறம்பான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டு மந்திரி சபையில் ஆ.ராசா, பாலு இருந்தபோது ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இந்தியாவை துண்டாடுவதற்காக இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். சனாதன தர்மத்துக்கு எதிரான தாக்குதலை தொடங்கியுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை அழிப்பதற்காக புறப்பட்டுள்ளதாக கூறுகிறார். தமிழக மக்கள் இதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.
அடுத்த தேர்தலில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோருக்கும் நல்ல பதிலடியை நீங்கள் தர வேண்டும். நமது நாடும், நமது குடும்பமும் முன்னேற பா.ஜனதாவுக்கு வாக்களியுங்கள். தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. நல்ல ஆட்சி வேண்டும் என்று விரும்புகிறது. அதை அண்ணாமலை தலைமையிலான பா.ஜனதா அந்த மாற்றத்தை, நல்லாட்சியை தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.