திருவள்ளூரில் நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு குழு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூரில் நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு குழு கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக திருவள்ளூர் மாவட்ட நகர்புற மேம்பாட்டு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திருவள்ளூர் மாவட்டத்தின் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களுக்கு சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் சுகாதார வசதிகளை அமைத்து அரசின் சமூக நலத்திட்டங்கள் நகர்புற ஏழை மக்களை சென்றடையவும் அடிப்படை வசதிகள் செய்தல் மற்றும் அரசு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தும் பொருட்டு, மாவட்ட கலெக்டரை தலைவராகவும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட நகர்புற மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டு முதல் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த குழு கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் திட்ட பகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைதல், ரேஷன் கடை, புறக்காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்குதல், குடிநீர் வழங்குதல், கழிவுநீர் அகற்றுதல், தெருவிளக்கு மற்றும் சாலைகள் அமைத்தல், மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்குதல், வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளித்தல், ஆவின் நிலையம் போன்ற அடிப்படைதேவைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து அடிப்படை தேவைகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வமணி, நிர்வாக பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ், சுப்பிரமணி, மோகன்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.