பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேண்டும்


பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 19 Jun 2023 5:28 PM GMT (Updated: 20 Jun 2023 7:40 AM GMT)

பயிர்களைபாதுகாக்க பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிற்சிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நெல் உள்ளிட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பயிர்களில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்திட விவசாயிகள் ரசாயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும் சூழ்நிலை காணப்படுகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பல்வேறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பரிந்துரைக்கப்படும் அளவிற்கு மேற்பட்டு பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதாலும், தானியப் பயிர்களிலும், காய்கறி பயிர்களிலும் எஞ்சிய நஞ்சு தங்கி விடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அது மட்டுமல்லாமல் பயன்படுத்துவோர்க்கும் அதிக அளவில் தீங்கு விளைவிக்கிறது என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், விவசாயிகள் பரிந்துரைக்கப்படும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான இயற்கை ஒட்டுண்ணிகள். விளக்குப் பொறி, இனக்கவர்ச்சிப் பொறி, உழவியல் முறைகள், உயிரியல் காரணிகள் ஆகியவற்றை கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டினை வெகுவாக குறைக்கலாம்.

ரசாயன மருந்துகளை தெளிக்கும் போது தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாளவில்லையெனில் அதனைத் தெளிப்பவருகளுக்கும் பல்வேறு தீய விளைவுகள் உண்டாகும். எனவே, உரிய பாதுகாப்பு முறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். ரசாயன பூச்சிக் கொல்லிகளை பரிந்துரை செய்யப்படும் அளவு நீருடன் கலந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளிப்பவர் கையுறை, காலுறை, கண்ணாடி, முகக் கவசம் இவற்றுடன் முழுக்கை சட்டையும் கண்டிப்பாக அணிந்து கொண்டு மருந்து தெளிக்க வேண்டும்.

அளவோடு பயன்படுத்த வேண்டும்

காலை அல்லது மாலை வேளையில் அதாவது குளிர்ச்சியான பொழுதுகளில் மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும். மருத்தினை அளப்பதற்கு கண்டிப்பாக வெறும் கைகளை பயன்படுத்தக் கூடாது. அதற்குரிய கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒரே ரசாயனப் பூச்சிக் கொல்லியை தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. மழை பெய்யும்போதும். காற்று வீசும் போதும் கண்டிப்பாகப் பூச்சிக் கொல்லி தெளிக்கக் கூடாது. மருந்து தெளிக்கும் சமயங்களில் தெளிப்பவர் சாப்பிடவோ, நீர் அருந்தவோ, புகைப்பிடிக்கவோ, மூக்குப்பொடி போடவோ கூடாது.

மருந்து தெளிப்பவர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 ஏக்கருக்கு மேல் மருந்து தெளிக்கக்கூடாது. மருந்து தெளித் முடித்த பின்னர் கைகளை சோப்பு கொண்டு நன்றாக கழுவ வேண்டும். பயிர்களை பாதுகாக்க பூச்சிக் கொல்லிகளை அளவோடு பயன்படுத்த வேண்டும்

கூடுதல் தகவல்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story