தமிழகத்தில் சுகாதாரத்துறையின் காலிப்பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் சுகாதாரத்துறையின் காலிப்பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

தமிழகத்தில் சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவரை தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போ கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 21-ந் தேதி ஒரே நாளில் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. நேற்று முதல், ஒரு பகுதியில் 3 பேருக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த பகுதிகளை கண்டறிந்து அங்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த காலங்களில், இந்த காலகட்டத்தில் பருவநிலை மாற்றங்களின் போது வருகிற அளவு தான் காய்ச்சல் தற்போதும் உள்ளது. நேற்று ஒட்டுமொத்த பாதிப்பு 442 ஆகும். இதில் 7 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மூன்று, நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்தாலே போதுமானது. தற்போது காய்ச்சல் கட்டுக்குள்தான் இருக்கிறது.

தமிழகத்தில் சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும். தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இல்லை. அப்படி பொதுமக்களுக்கு மருந்து தட்டுப்பாடு இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தால், 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story