நிரம்பியது வைகை அணை.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!


நிரம்பியது வைகை அணை.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
x
தினத்தந்தி 10 Nov 2023 12:55 AM GMT (Updated: 10 Nov 2023 1:12 AM GMT)

கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை,

தொடர் மழை காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நள்ளிரவில் வைகை அணையின் நீர்மட்டம் 70.51 அடியை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, வினாடிக்கு 2,271 கன அடி தண்ணீர் அணையில் உள்ள பிரதான 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. ஏற்கெனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு 3 கட்டங்களாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது 33-வது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று காலை அணையில் இருந்து பெரியார் பாசன பகுதிக்காக வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story