"முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை இழிவுப்படுத்தி விஷத்தை கக்கியுள்ளார் கவர்னர்" - கொந்தளித்த வைகோ


முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை இழிவுப்படுத்தி விஷத்தை கக்கியுள்ளார் கவர்னர் - கொந்தளித்த வைகோ
x

கவர்னர் ஆர்.என்.ரவியின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

உயிர்கல்வி நிறுவனங்களில் பாடப் புத்தகங்களை தமிழாக்கம் செய்வது என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவர்னரும், தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

அதில் பேசிய அவர், "நாம் வெளிநாடு சென்று பேசி அழைப்பதால் மட்டும் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள். பேரம் பேசுவதில் அவர்கள், மிக கடினமான தன்மை உடையவர்கள். எனவே அதற்கான சூழலை நமது மாநிலத்தில் மேலும், மேலும் உருவாக்க வேண்டும். அதுவே அவர்களை ஈர்க்ககூடியதாக இருக்கும்.

நமது நாட்டில் உள்ள பல மாநிலங்கள் இதை செய்கின்றன. இதில் அரியானா மாநிலம் வெளிநாட்டு முதலீட்டில் நமக்கு இணையாக உள்ளது. எனவே உலக போட்டிக்கு தேவையான அம்சங்களை ஏற்படுத்தி வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும். இதன் மூலம் தான் தகுதியான போட்டியை அளிக்க முடியும். அதற்கு தேவையான மனிதவளம் இருப்பதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுளை ஈர்ப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார். இந்தநிலையில் அதற்கு எதிராக வெளிநாடு செல்வதால் மட்டும் முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவி சூசகமாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவியின் இத்தகைய கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், கவர்னர் ஆர்.என்.ரவியின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அவர் விஷமத்தனமான கருத்தை கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை பற்றி இழிவுபடுத்தியும் பேசியிருக்கிறார். தமது போக்கைக் கைவிட வேன்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story