ஓ.பன்னீர் செல்வம் வந்த வாகனத்தில், அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன - சி.வி.சண்முகம்


ஓ.பன்னீர் செல்வம் வந்த வாகனத்தில், அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன - சி.வி.சண்முகம்
x

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி உள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றபோது ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் காரணமாக அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களுக்குப் பின் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க கடந்த 20ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி 21ஆம் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. . முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க.வினர் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, அலுவலகத்தினுள் ஆவணங்களும், பொருட்களும் கீழே சிதறியிருந்தது.

அலுவலகத்தை திறந்து பார்வையிட்டபின், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவிற்கு வந்த பரிசுப் பொருட்களும், சில விலை உயர்ந்த பொருட்களும் காணமல் போயுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்திலிருந்த பொருட்கள், ஆவணங்களை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரம், 31 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கம்ப்யூட்டர், வெள்ளி வேல், முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கட்சிக்கு வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், அதிமுக - பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை அசல் பத்திரம், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் என பல்வேறு ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக சி.வி.சண்முகம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சி.வி சண்முகம் கூறியதாவது:-

ஜெ.சி.டி. பிரபாகர், அ.தி.மு.க.விலிருந்து முன்பே நீக்கப்பட்டு, அ.தி.மு.க.வுக்கு சம்மந்தமே இல்லாத மூன்றாம் நபரான புகழேந்தி உட்பட ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில், 300 பேர் கொண்ட ரவுடிகள், குண்டர்கள், சமூக விரோதிகள் ஆகியோர் கையில் கத்தி, கடப்பாரை, தடி, கற்களோடு வந்தனர்.

தலைமை அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அதனை உடையுங்கள் என ஓ.பன்னீர் செல்வம் சொல்லி, அதனை உடைத்து அவரின் ஆதரவாளர்களுடன் உள்ளே சென்றுள்ளார். இது அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவில் பல்வேறு கட்சியில் இதுவரை உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டு, பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. பிறகு ஒன்றிணைந்து இருக்கிறாகள். அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். அ.தி.மு.கவில் 1988ல் ஏற்பட்ட ஜெயலலிதா, ஜானகி பிளவின்போது அ.தி.மு.க. அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. யாரும் இந்த அளவுக்கு தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழையவில்லை. அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால், இன்று அ.தி.மு.க.வில் பெரும்பான்மையையும், தொண்டர்களிடத்தில் நன்மதிப்பையும் இழந்த ஓ.பன்னீர் செல்வம் அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்று சீல் வைக்க காரணமாக இருந்துள்ளார்.

எந்த வாகனத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமை அலுவலகத்திற்கு வந்தாரோ அதே வாகனத்தில், அலுவலகத்தினுள்ளே இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் தலைமை அலுவலக ஆவணங்களை எடுத்துசென்றார். இதுவும் அனைவருக்கும் தெரியும்.

11ம் தேதி இரவே எங்கள் மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார். ஆனால், இன்று வரை போலீசார் அந்தப் புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னதாக 8ம் தேதி எங்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சமூக விரோதிகளால் தலைமை அலுவலகத்திற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று புகார் கொடுத்தார். ஆனால், போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை.

11ம் தேதி காவல்துறையின் பாதுகாப்போடு அந்த சம்பவங்கள் நடைபெற்றது. 32 ஆண்டு தமிழ்நாட்டை ஆண்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம் திமுக அரசால் சீல் வைக்கப்பட்டது. இந்தியாவிலே இதுவரையில் எந்தக் கட்சியிலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக சரித்திரமே இல்லை" என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. கோவை, புதுச்சேரி, திருச்சி அ.தி.மு.க. அலுவலக இடத்திற்கான அசல் பத்திரங்களும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் வந்த வாகனத்தில், அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன என கூறினார்.


Next Story