'வந்தே பாரத்' ரெயில் மீது கல் வீசிய வழக்கு; 6 சிறுவர்கள் போலீசில் சிக்கினர்


வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசிய வழக்கு; 6 சிறுவர்கள் போலீசில் சிக்கினர்
x
தினத்தந்தி 8 Feb 2024 9:20 AM IST (Updated: 8 Feb 2024 1:08 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் மீது கற்களை வீசியதற்கான காரணம் குறித்து சிறுவர்களிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி,

சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கடந்த 4-ந் தேதி இரவு 10 மணி அளவில் நெல்லை அருகே உள்ள மணியாச்சியை கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது முட்புதர்களுக்குள் பதுங்கி இருந்த மர்மநபர்கள் ரெயில் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் ரெயிலில் 6 பெட்டிகளில் இருந்த கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ரெயிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நெல்லை அருகே உள்ள நாரைக்கிணறுக்கும், கங்கைகொண்டானுக்கும் இடைப்பட்ட பகுதியில் மர்மநபர்கள் ரெயில் மீது கல்வீசி தாக்கியது தெரியவந்தது. அவர்களை பிடிப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் 'வந்தே பாரத்' ரெயில் மீது கல்வீசியது 6 சிறுவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாரைக்கிணறு போலீசார், அந்த 6 சிறுவர்களையும் மடக்கிப் பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். ரெயில் மீது கற்களை வீசியதற்கான காரணம் குறித்து சிறுவர்களிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story