வி.சி.க. கொடிக்கம்பத்தை அ கற்ற கூறிய பெண் தாசில்தாருக்கு கொலை மிரட்டல்
சின்னசேலம் அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற கூறிய பெண் தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க. மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அ.வாசுதேவனூர் பஸ் நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த சின்னசேலம் தாசில்தார் இந்திரா, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள், அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம், இதுபோன்று அனுமதி இல்லாமல் கட்சி கொடிக்கம்பம் அமைக்கக்கூடாது. எனவே கொடிக்கம்பத்தை உடனே அகற்றுங்கள் என்று தெரிவித்தனர். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அங்கு கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார்.
தாசில்தாருக்கு கொலை மிரட்டல்
இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே தாசில்தார் இந்திரா போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தனபால் என்பவர் என்னை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார். அதன்பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தனபால் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.