மந்தமாக நடைபெறும் மேம்பால பணிகளால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்


மந்தமாக நடைபெறும் மேம்பால பணிகளால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
x

தவிட்டுப்பாளையத்தில் மந்தமாக நடைபெறும் மேம்பால பணிகளால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

மேம்பாலம் கட்டும் பணி

கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் முதல் சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்பொழுது தவிட்டுப்பாளையம் பகுதியில் 960 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், கட்டிபாளையம், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு தவிட்டுப்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்து அந்த வழியாக சென்று வருகின்றனர்.

மனு

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் கடந்த 15 ஆண்டுகளாக தவிட்டுப்பாளையத்தில் மேம்பாலம் அமைக்க கோரி மனு அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தவிட்டுப்பாளையம் முதல் பகுதியில் 8 இடங்களில் மேம்பாலம் கட்டி சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு அந்த சாலை வழியாக சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு செல்ல வசதி செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலையோரங்களில் இருந்த மரங்களை அகற்றிவிட்டு மண்ணை தோண்டி அகற்றும் பணி நடைபெற்று சேலம் -கரூர், தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு இந்த இருபுறங்களில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக தனியார் மற்றும் அரசு பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இரு சர்வீஸ் சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் பாலத்துறை முதல் தவிட்டுப்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சர்வீஸ் சாலைகளில் ஆங்காங்கே குழி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சென்று வருகின்றனர். அதேபோல் தவுட்டுப்பாளையம் அருகே உள்ள போலீஸ் செக் போஸ்ட்அருகே தார் சாலை மிகவும் பழுதடைந்து பெரிய பள்ளமாக உள்ளது. இதை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பாலம் அமைக்கும் பணி தொடங்கி பதினொரு மாதங்கள் ஆகிறது.

கோரிக்கை

மேம்பாலம் அமைக்கும் பணி மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது. சர்வீஸ் சாலை வழியாக அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.அதே போல் அப்பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள ஹோட்டல்களுக்கு சாலையின் அருகிலேயே கார்களை, லாரிகளை நிறுத்தி விட்டு சாப்பிட சென்று விடுகின்றனர். இதனால் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவில் தார் சாலை உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே ஒப்பந்ததாரர்கள் விரைந்து மேம்பாலம் அமைக்கும் பணியை முடித்து மேம்பாலம் வழியாக அனைத்து வாகனங்களும் செல்ல தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிழற்குடை வேண்டும்

பாலத்துறையை சேர்ந்த குமரவேல்:- மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த பணி முடியும் வரை பள்ளி மாணவ-மாணவிகளின் வசதிக்காக கரூர் செல்லும் பஸ்கள் நின்று செல்ல பாலத்துறை அருகே உள்ள வெற்றிலை அசோசியேஷன் சங்கம் அருகேயும், எதிரில் கரூரில் இருந்து வரும் வாகனங்கள் பாலத்துறை அருகே நின்று செல்ல அப்பகுதியிலும் நிழற்குடை அமைக்க வேண்டும்.

வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்:-மேம்பால பணிக்காக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

விபத்தில் சிக்கும் வாகனங்கள்

முத்தனூரை சேர்ந்த செல்வகுமார்:-தவிட்டுப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே சாலையைஉடைத்து அதன் வழியாக செல்லும் வாகனங்கள், நடந்து செல்பவர்கள் என விபத்து ஏற்பட்டு வந்தது. எனவே மேம்பால பணியை முடித்து விபத்துக்களை தடுக்க வேண்டும்.

திருக்காடுதுறையை சேர்ந்த வடிவேல்:- நான் தினமும் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வருவது வழக்கம். தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை போடப்பட்டு அனைத்து வாகனங்களும் செல்கின்றன. ஆனால் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் பெரிய பெரிய குழிகள் உள்ளது. அதை சீரமைக்கவில்லை. சர்வீஸ் சாலை ஓரத்தில் கார்கள் அடிக்கடி மணிக் கணக்கில் நிற்பதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே விரைந்து மேம்பாலப் பணியை முடித்து வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story