நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு


நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
x

நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

வெண்மணி தியாகிகள்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கீழவெண்மணி கிராமம் உள்ளது. இங்கு கடந்த 1968-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி கூலி உயர்வு கேட்டு விவசாய தொழிலாளர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள், குழந்தைகள் உள்பட 44 பேர் ஒரே குடிசையில் அடைத்து வைக்கப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூலி உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி 54-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

மலர் வளையம் வைத்து அஞ்சலி

44 பேர் கொலை செய்யப்பட்ட குடிசை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் உள்ள தூணில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் சுகுமாறன், விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, மாரிமுத்து, தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கரும்பு வழங்க வேண்டும்

தமிழகத்தில் இன்றும் சாதி கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக கவர்னர் ரவி அடிப்படை கடமையாற்ற தவறி விட்டார். அவர் ஆர்.எஸ்.எஸ். முன்னணி ஊழியர் போல செயல்படுகிறார். அவர் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

பொங்கல் தொகுப்பில் அரிசி, சர்க்கரை உடன், செங்கரும்பையும் சேர்த்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெறுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story