முகப்பேரில் மீன் கடைக்குள் புகுந்து துணிகரம்; அ.ம.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை


முகப்பேரில் மீன் கடைக்குள் புகுந்து துணிகரம்; அ.ம.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை
x

சென்னை முகப்பேரில் மீன் கடைக்குள் புகுந்து அ.ம.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, வடக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 48). இவர், சென்னை நொளம்பூரில் தன்னுடைய மனைவி, மகனுடன் வசித்து வந்தார். ஜெகன், முகப்பேர் அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் மீன் கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஜெகன் வழக்கம்போல் மீன் கடையில் இருந்தார். அப்போது மீன் கடைக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஜெகனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகன், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓடஓட விரட்டி ஜெகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொலையான ஜெகன், 2015-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வந்தார். பின்னர் அ.ம.மு.க.வுக்கு சென்றார். அ.ம.மு.க. ஜெ.பேரவையின் முன்னாள் திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.

அவரது சொந்த ஊரில் பேனர் வைப்பது தொடர்பாக ராஜேஷ் என்பவருக்கும், ஜெகனுக்கும் தகராறு இருந்து வந்தது. இதனால் ராஜேஷ் தரப்பினர் ஜெகனின் அண்ணன் மதன் என்பவரை 2015-ம் ஆண்டு கொலை செய்தனர். இதற்கு பழி தீர்க்கும் விதமாக ஜெகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து 2021-ம் ஆண்டு ராஜேசை கொலை செய்தார். இந்த வழக்கில் கைதாகி சிறை சென்ற ஜெகன், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

அதன்பிறகு குடும்பத்துடன் மனைவியின் சொந்த ஊரான சென்னைக்கு வந்து குடியேறிய ஜெகன், கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் இங்கு மீன்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். எனவே ராேஜஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஜெகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி நொளம்பூர் போலீசார் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story