ஓட்டப்பிடாரம் அருகே துணிகரம்:கடன் வாங்கி வந்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு ரூ.8 லட்சம் கொள்ளை


ஓட்டப்பிடாரம் அருகே துணிகரம்:கடன் வாங்கி வந்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு ரூ.8 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 11 July 2023 6:45 PM GMT (Updated: 12 July 2023 7:29 AM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே கடன் வாங்கி வந்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு ரூ.8 லட்சம் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலைக்கு செல்லும் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த மோட்டார் சைக்கிள் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 45) என்பருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிள் எரிந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் காட்டுப்பகுதியில் அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததும் தெரியவந்தது.

பணம் கொள்ளை

இதையடுத்து அவரை போலீசார் மீட்டனர். அவர் சோர்வுடன் காணப்பட்டதால் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முத்துராமலிங்கம், ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கிக்கொண்டு குறுக்குச்சாலை நோக்கி வந்ததாகவும், அப்போது கக்கரம்பட்டி விலக்கு பகுதியை தாண்டி வந்தபோது மர்மகும்பல் ஒன்று தன்னை வழிமறித்து தாக்கி, கை, கால்களை கட்டிப்போட்டு பணத்தை பறித்துக் கொண்டதாகவும், பின்னர் மோட்டார் சைக்கிளுடன் தப்பி சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக அவர் ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், முத்துராமலிங்கத்திடம் மர்மகும்பல் பணம் கொள்ளையடித்து சென்றது உண்மை தானா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துராமலிங்கம் தான் ஒரு மந்திரவாதி என்று கூறி நகைகளை இரட்டிப்பாக்கி தருவதாக சிலரிடம் நகை மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அவர் மீது ஓட்டப்பிடாரம், நாரைக்கிணறு, கோவில்பட்டி, கயத்தாறு ஆகிய போலீஸ் நிலையங்களில் நகை மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story