கால்நடை மருத்துவ முகாம்
கால்நடை மருத்துவ முகாம்நாளை நடக்கிறது
ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கால்நடை மருத்துவ முகாம், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் 3 இடங்களில் நடத்தப்பட உள்ளது. அதன்படி நாளை(செவ்வாய்க்கிழமை) ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் கிராமத்தில் முதலாவதாக நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்துகள், செயற்கை முறை கருவூட்டல், சிறிய அளவிலான அறுவை சிகிச்சை, புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளுக்கான தோல் நோய்கள் கண்டறிதல், ரத்தம், சளி, பால் ஆகிய மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இதன் தொடர்பான நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விளக்கப்படவுள்ளது. கிடேரி கன்றுகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. மேலும் சிறந்த கறவைப்பசு மற்றும் கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் கால்நடைகளை சிறப்பு முகாமிற்கு அழைத்து வந்து இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.