பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் வெற்றி பெற விஜயகாந்த் வாழ்த்து


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் வெற்றி பெற விஜயகாந்த் வாழ்த்து
x

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் வெற்றி பெற விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று, மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

நடைபயண தொடக்க விழா, ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் வந்து தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிலையில் அவரது நடைபயணம் வெற்றி பெற தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுத தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார்.

மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Next Story