சந்தனப் பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
கடும் நெரிசல் ஏற்பட்டதையடுத்து விஜயகாந்தின் உடல் இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தீவுத்திடலில் மதியம் வரை விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் விஜயகாந்த் உடல், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
Live Updates
- 29 Dec 2023 11:56 AM IST
விஜயகாந்த் உடல் அடக்கம்: சென்னை மாநகராட்சியில் தீர்மானம்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்தில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
- 29 Dec 2023 11:37 AM IST
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான்.!
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மனைவி பிரேமலதா, குடும்பத்தினருக்கு செந்தில் தொண்டைமான் ஆறுதல் கூறினார்.
- 29 Dec 2023 11:31 AM IST
விஜயகாந்த் உடலுக்கு சீமான் கண்ணீர் மல்க அஞ்சலி
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல் கூறினார்.
- 29 Dec 2023 11:12 AM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் எம்.பி. நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
- 29 Dec 2023 10:32 AM IST
விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
- 29 Dec 2023 10:17 AM IST
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திற்காக மாநகராட்சி சார்பில் தயாராகும் வாகனம்.
- 29 Dec 2023 10:03 AM IST
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு இயக்குநர் பாக்யராஜ், நடிகர் சாந்தனு, நடிகை குஷ்பு, இயக்குநர் சுந்தர் சி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது நடிகை குஷ்பு பிரேமலதா விஜயகாந்தை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
- 29 Dec 2023 9:21 AM IST
விஜயகாந்த் உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
- 29 Dec 2023 8:56 AM IST
பிரேமலதாவை கட்டியணைத்து ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி!
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு மற்றும் நடிகர் அருள்நிதி ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை முதல்-அமைச்சரின் சகோதரி கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றினார்.
அதைபோல விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஸ்ரீகாந்த் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
- 29 Dec 2023 8:47 AM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறை , மணல்மேடு , குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கடையடைப்பு செய்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. சீர்காழியில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.



















