குளத்தில் போட்டிப்போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்


குளத்தில் போட்டிப்போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்
x

வேடசந்தூர் அருகே குளத்தில் போட்டிப்போட்டு கிராம மக்கள் மீன்களை பிடித்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கெண்டையகவுண்டனூரில் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொட்டித்தீர்த்த கனமழை எதிரொலியாக பெரியகுளம் நிரம்பி வழிந்தது. இதனையடுத்து பல்வேறு வகையான மீன் குஞ்சுகளை கிராம மக்கள் அந்த குளத்தில் வளர்க்க விட்டனர். அந்த மீன்கள் வளர்ந்து பெரிதாகி விட்டன.

இதைத்தொடர்ந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதற்காக கெண்டையகவுண்டனூர், முருநெல்லிக்கோட்டை, சாலையூர் நால்ரோடு, ஆசாரிபுதூர், தீத்தாக்கவுண்டனுர், பூலாங்குளம், உலகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஏராளமானோர் குளத்துக்கு திரண்டனர். பின்னர் அவர்கள், குளத்தில் இறங்கி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர்.

தாங்கள் கொண்டு வந்த வலைகளை வீசியும், சிலர் கைகளாலும் கெழுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை, விரால் ஆகிய மீன்களை பிடித்தனர். 10 கிலோ எடை கொண்ட ஒரே மீன்களும் வலைகளில் சிக்கின. கிராம மக்கள் தாங்கள் பிடித்த மீன்களை வீட்டுக்கு கொண்டு சென்று குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


Next Story