ஆர்.கே.பேட்டை அருகே மரங்களை வெட்டி சாலையில் போட்டு கிராம மக்கள் மறியல் - பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிப்பு


ஆர்.கே.பேட்டை அருகே மரங்களை வெட்டி சாலையில் போட்டு கிராம மக்கள் மறியல் - பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிப்பு
x

ஆர்.கே.பேட்டை அருகே ஆதிதிராவிடர்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மரங்களை வெட்டி சாலையில் போட்டு கிராம மக்கள் மறியல் செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே பள்ளிப்பட்டு சாலையில் ராஜா நகரம் கிழக்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி உள்ள நிலம் ஆதிதிராவிடர்கள் 100 பேருக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. மேலும், சில நாட்களுக்கு முன்பு நிலம் அளந்து கற்கள் நடப்பட்டது.

இந்த நிலத்தை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கியதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த வேறு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலர் மின்தடை செய்து இரவோடு இரவாக ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் நடப்பட்ட அளவு கற்களை பிடுங்கி எறிந்து உள்ளனர். இதனால் நேற்று காலை முதல் அந்த கிராமத்தில் பதற்றம் நிலவியது. இதனால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், டி.ஐ.ஜி. சத்யப்ரியா அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து ஆதிதிராவிடர்கள் சார்பில் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ராஜா நகரம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன், விநாயகம், ரவிகண்ணன் ஆகிய 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதை அறிந்த ராஜா நகரம் கிழக்கு கிராம மக்கள் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், ஆதிதிராவிட மக்களுக்கு நிலம் ஒதுக்குவதை கண்டித்தும் பள்ளிப்பட்டு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், இந்த கிராமத்திற்கு பிரதான சாலையில் மரங்களை வெட்டி சாலைகளை அடைத்தனர். இதனால் அங்கு வாகன போக்குவரத்து தடைபட்டது. திருத்தணி வருவாய் கோட்டாச்சியர் சத்யா அங்கு விரைந்து சென்று நிலைமைகளை பார்வையிட்டார். அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story