வாலாஜாபாத் அருகே ரேஷன் கடை கேட்டு எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் கோரிக்கை


வாலாஜாபாத் அருகே ரேஷன் கடை கேட்டு எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் கோரிக்கை
x
காஞ்சிபுரம்

வாலாஜாபாத்,

வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்னழுத்த குறைபாடு காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதடைவதாகவும் அதனால் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பேட்டை, திம்மையன்பேட்டை, ஏகனாம்பேட்டை, பூசிவாக்கம், வெண்குடி என 5 கிராமங்களில் ரூ.40 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு அதற்கான தொடக்க விழா நடைபெற்றது. வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் கலந்துகொண்டு புதிய டிரான்ஸ்பார்மர்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஏகனாம்பேட்டை கிராமத்திற்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதிக்கு வந்தபோது கிராம மக்கள் திரண்டு வந்து எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து தற்போது தான் தனக்கு தெரிய வருகிறது. அதனால் உடனடியாக புதிய ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். அதன் பேரில் முற்றுகையிட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் பி.சேகர், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி சுந்தரமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் பூசிவாக்கம் லெனின்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story