என்.எல்.சி. சுரங்கநீரை வெளியேற்ற குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நெய்வேலி அருகே பரபரப்பு


என்.எல்.சி. சுரங்கநீரை வெளியேற்ற    குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்    நெய்வேலி அருகே பரபரப்பு
x

நெய்வேலி அருகே என்.எல்.சி. சுரங்க நீரை வெளியேற்றுவதற்காக குழாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

நெய்வேலி,

குழாய் மாற்றி அமைக்க...

நெய்வேலி அருகே வானதிராயபுரம் ஊராட்சிக்குட்பட்டது தென்குத்து கிராமம். இந்த கிராமத்தின் எல்லையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கம் 1-ஏ அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து நீரை வெளியேற்றுவதற்காக தென்குத்து ஊர் எல்லையில் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது என்.எல்.சி. நிர்வாகம் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக ஊர் எல்லை பகுதியில் சென்ற குழாய் இணைப்பை, கிராமத்தின் வழியாக மாற்றி அமைத்து கன்னியாகோவில் ஓடைக்கு சுரங்க நீரை கொண்டு செல்ல முடிவு செய்தது. இதற்கான பணிகள் நேற்று காலை தொடங்கியது.

போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்குத்து கிராம மக்கள் குழாய் அமைக்கப்படும் இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் விரிவாக்கப்பணிக்காகவும், சுரங்க நீரை வெளியேற்றுவதற்காகவும் குழாய் இணைப்புகளை மாற்றி அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, என்.எல்.சி. நிர்வாகமே திரும்பி போ என கண்டன கோஷம் எழுப்பியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் மற்றும் வானதிராயபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரிய.ஆறுமுகம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோசப், பழனிவேல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார், என்.எல்.சி. நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு குழாய்களை மாற்றி அமைக்கும் பணியை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை ஏற்ற கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பசுமை வேலி அமைக்கவேண்டும்

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த காலங்களில் வானதிராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த வீடு, நிலங்களை என்.எல்.சி. நிறுவனம் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக கையகப்படுத்தியது. ஆனால் வீடு, நிலம் வழங்கியவர்களுக்கு வழங்க வேண்டிய உரிய இழப்பீட்டுத் தொகை, வேலைவாய்ப்பை இதுவரை வழங்கவில்லை.

மேலும் மக்கள் வசிக்கும் பகுதி அருகில் சுரங்கம் அமைக்கப்பட்டால், அங்கு மக்கள் வசிக்கும் பகுதிக்கும் சுரங்கப் பகுதிக்கும் இடையே சுமார் ஆயிரம் மீட்டர் ஒதுக்கீடு செய்து சுரங்கப் பகுதியில் இருந்து ஏற்படும் மாசு கிராம மக்களை பாதிக்காத வகையில் மரங்களை நட்டு பசுமை வேலி அமைத்து தர வேண்டும்.

ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் அதை செய்யாமல் சுமார் நூறு மீட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்து இப்பகுதி மக்களை ஏமாற்றி வருகிறது. ஆகவே நிலம், வீடு வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பு, உரிய இழப்பீடு தொகை வழங்குவதோடு, ஆயிரம் மீட்டர் தொலைவில் பசுமைவேலி அமைக்கவேண்டும் என்றனர்.


Next Story