சமையல் பாத்திரங்களுடன் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்


சமையல் பாத்திரங்களுடன் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 Sep 2023 8:45 PM GMT (Updated: 25 Sep 2023 8:46 PM GMT)

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் சமையல் பாத்திரங்களுடன் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல் சவேரியார்பாளையம், அசனாத்புரம், ஜீவாநகர், சி.கே.சி. காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் நேற்று கிழக்கு தாலுகா அலுவலகத்துக்கு சமையல் பாத்திரங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் தாலுகா அலுவலகம் முன்பு சமையல் பாத்திரங்களை வைத்துவிட்டு அமர்ந்த கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அரபு முகமது முன்னிலை வகித்தார். போராட்டத்தின் போது, சவேரியார்பாளையம், அசனாத்புரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 540 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 2018-ம் ஆண்டு மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதையடுத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் கோரிக்கை நிறைவேறவில்லை.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

எனவே மனு கொடுத்த அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அதுவரை தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்போம் என்று கூறி கிராம மக்கள் கோஷங்களை எழுப்பினர். பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவலறிந்ததும் வடக்கு போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து தாசில்தார் வில்சன் தேவதாஸ் மற்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களில் 30 பேருக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 100 பேருக்கு இடம் தேர்வு செய்யப்பட்டதும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும். மீதமுள்ளவர்கள் கொடுத்த மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவர்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story