குண்டும், குழியுமான சாலையால் அல்லல்படும் கிராம மக்கள்


குண்டும், குழியுமான சாலையால் அல்லல்படும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:46 PM GMT)

மரக்காணம் அருகே குண்டும், குழியுமான சாலையால் அல்லல்படும் கிராம மக்கள் நிதி ஒதுக்கீடு செய்தும் சீரமைக்காத அவலம்

விழுப்புரம்

பிரம்மதேசம்

மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், ஊரணி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் வடஅகரம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தங்கள் கிராமத்தில் இருந்து மரக்காணம் பகுதிக்குத்தான் செல்ல வேண்டும். மேலும் இங்குள்ள மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் படிப்பதற்கும் மரக்காணம் வழியாகத்தான் சென்று வர வேண்டும்.

தார் சாலை வசதி

இதற்காக வடஅகரம் கிராமத்தில் இருந்து மரக்காணத்துக்கு தார் சாலை வசதி உள்ளது. ஆனால் தற்போது இந்த சாலையை பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும், குழியுமாக மாறி சேதம் அடைந்து விட்டது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த சாலையின் இடையே தரைப்பாலம் ஒன்று உள்ளது. சாலையோடு சேர்ந்து இந்த பாலமும் உடைந்து சேதம் அடைந்து விட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் தற்காலிகமாக மணல் போட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. இதை கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வரும் அவல நிலையும் இருந்து வருகிறது.

போக்குவரத்து துண்டிப்பு

மேலும் தரைப்பாலம் அடைபட்டுள்ளதால் மழைக்காலங்களில் பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் வழிந்தோடுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால் கிராமமக்கள், மாணவ, மாணவிகள், அன்றாடம் வேலைக்கு செல்வோர் வெளியே செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சாலையை சீரமைத்துதரக்கோரி மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.எனவே சாலையை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த தனராஜ் என்பவர் கூறியதாவது:-

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது

இந்த சாலையானது சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன் பிறகு முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலையானது மிகுந்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையை சீரமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதன் பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு சாலை அமைப்பதற்கு ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக சாலையை சீரமைக்காமல் கிடப்பிலேயே போட்டுவிட்டனர்.

எனவே மீண்டும் சாலையை சீரமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களை போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளாமல் உடனடியாக சாலையை சீரமைத்துதர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



Next Story