என்.எல்.சி.யின் நில சீரமைப்பு பணிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்


என்.எல்.சி.யின் நில சீரமைப்பு பணிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:46 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே பொக்லைன் எந்திரங்களை முற்றுகையிட்டு என்.எல்.சி. நிர்வாகத்தின் நில சீரமைப்பு பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடலூர்

சேத்தியாத்தோப்பு

நில சீரமைப்பு பணி

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

அந்த வகையில் என்.எல்.சி. அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் நில சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கிராம மக்கள் முற்றுகை

இதுபற்றி தகவல் அறிந்ததும் மேல்வழையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் எந்திரங்களை முற்றுகையிட்டனர். இதனால் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.இது குறித்து தகவல் அறிந்து சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார், இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

அப்போது கிராம மக்கள் கூறுகையில், நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பணி செய்ய அனுமதிப்போம் என்றனர்.

இதற்கிடையே கிராமமக்களின் போராட்டத்தை கேள்விப்பட்டு புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன், பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்தனர். இதையடுத்து என்.எல்.சி. அதிகாரிகள் பணியை நிறுத்திவிட்டு பொக்லைன் எந்திரங்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story