விழுப்புரம்: அரசு பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு


விழுப்புரம்: அரசு பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு  ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Feb 2024 4:43 AM GMT (Updated: 22 Feb 2024 5:15 AM GMT)

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

விழுப்பரம் மாவட்டம் மேல்சேவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சேவூர்அம்மன் குளத்துமேடு கிராமத்தில் நேற்று அரசு பேருந்து சாலை வளைவைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வன் பிரவீன் குமார் (வயது 16) த/பெ.அன்பழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வன் வீனேஷ் (வயது 16) த/பெ.ஜெயராஜு என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாயும். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.என தெரிவித்துள்ளார்.


Next Story