போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 217 பேருக்கு அபராதம்


போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 217 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 6:46 PM GMT)

நாகர்கோவிலில், போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 217 பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதிக மாணவர்களை ஏற்றி வந்த 3 ஆட்டோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில், போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 217 பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதிக மாணவர்களை ஏற்றி வந்த 3 ஆட்டோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து விதி மீறல்

நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன்படி நேற்று கோட்டார், கலெக்டர் அலுவலக சந்திப்பு, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், வாகனத்திற்குரிய ஆவணங்கள் இல்லாமலும், இருசக்கர வாகனத்தில் வந்த மொத்தம் 217 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சிலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இதற்கிடையே வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தாா்கள். பின்னர் அந்தந்த வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன் உள்ளிட்டவைகளுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.

3 ஆட்டோக்களுக்கு அபராதம்

அதே சமயம் நாகர்கோவிலில் உள்ள பள்ளிக்கூடங்கள் முன்பு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதிக மாணவர்களை ஏற்றி வந்த 3 ஆட்டோக்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.


Next Story