தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி வருகை


தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி வருகை
x
தினத்தந்தி 4 Jun 2023 5:45 AM IST (Updated: 4 Jun 2023 5:45 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி ராஜ்பவனில் நாளை துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி வந்தார்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி ராஜ்பவனில் நாளை துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி வந்தார்.

துணைவேந்தர்கள் மாநாடு

மத்திய அரசு புதிய தேசிய கல்விக்கொள்கையை கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதில் பல அம்சங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றி ஆலோசனை செய்ய நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் நாளை (திங்கட்கிழமை) துணை வேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ஆர்.என்.ரவி நடத்த உள்ளார்.

இதையொட்டி நேற்று கவர்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 3.40 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டார். பின்னர் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனத்துறை விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அதன் பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி கோத்தகிரி வழியாக இரவு 7.10 மணிக்கு ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார்.

கவர்னர் வருகை

ஊட்டிக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவியை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வரவேற்றார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவர்னர் ராஜ்பவனில் ஓய்வு எடுக்கிறார். நாளை (திங்கட்கிழமை) ஊட்டி ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கவர்னர், பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் புதிய தேசியக் கல்விக்கொள்கை பற்றி ஆலோசனை நடத்த உள்ளார்.

இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டியில் உள்ள முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து வருகிற 9-ந் தேதி வரை ஊட்டியில் தங்கி இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். பின்னர் 9-ந் தேதி ஊட்டியில் இருந்து சென்னை திரும்புகிறார். ஊட்டியில் கவர்னர் வருகையையொட்டி 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

1 More update

Next Story