சென்னை மெட்ரோ ரயில் பணியின் போது மண் சரிந்து கூலி தொழிலாளி பலி..!
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலந்தூர்:
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி மடிப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் வரை நடைபெற்று வருகிறது. இதில் ஆதம்பாக்கத்தையடுத்த உள்ளகரத்தில் மெட்ரொ ரயில் பணி நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை 1 மணியளவில் கழிவுநீர் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அங்கு வேலை செய்து வந்த சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த ரவி (வயது 45) என்ற கூலி தொழிலாளி 12 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ரவி மீது மண் முழுவதுமாக சரிந்து விழுந்தது. மண் சரிவில் சிக்கிக் கொண்ட ரவியை அருகில் வேலை செய்தவர்கள் 30 நிமிடங்கள் மேல் போராடி மீட்டனர். ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்தும் வராததால் தங்களுடைய டாட்டா குட்டி யானை வாகனத்திலேயே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் ரவி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தனர். இதையடுத்து சக தொழிலாளா்கள், ரவி உடலை சரக்கு ஆட்டோவில் ஏற்றி, சம்பவம் நடந்த இடத்தின் அருகே கொண்டு வந்து நிறுத்தினா்.
மெட்ரோ ரயில் ஒப்பந்ததாரா் கோவிந்தராஜ் இன்று காலை 6 மணியளவில் வந்து, அதன்பின்பு மடிப்பாக்கம் போலீசில் புகாா் செய்தாா். போலீசாா் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மெட்ரோ ரயில் பணியில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ரவிக்கு திருமணமாகி செல்லக்கொடி, சுகன்யா என்ற இரு மனைவிகள் உள்ளனா்.