நடை பயிற்சி சென்றவரிடம் வழிப்பறி; 2 பேர் கைது
ராமநாதபுரத்தில் நடை பயிற்சி சென்றவரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரநாதன் (வயது 35). இவரது மனைவி ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்து வருவதால் ராமநாதபுரம் அகில் கிடங்கு தெருவில் குடும்பத்துடன் தங்கி இருந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சிதம்பரநாதன் ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த மர்மநபர் ஒருவர் பணத்தை தருமாறு கேட்டு மிரட்டி உள்ளார். அப்போது அங்கு வந்த மேலும் 3 பேர் சேர்ந்து கொண்டு பீர்பாட்டிலை காட்டி பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். அவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்த சிதம்பரநாதன் தான் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட 4 பேரும் இதை வெளியில் சொன்னால் கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறி பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்று விட்டார்களாம்.
இதுகுறித்து சிதம்பரநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து முதுனாள் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் மகன் வெள்ளை சந்தோஷ் (19) மற்றும் கழுகூரணி கிராமத்தைச் சேர்ந்த மாதவன் மகன் மணிகண்டன் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.