மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை


மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி

சிறப்பு கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைத்திடும் வகையிலும், அவா்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் இந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள்

இதில் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அனைத்து மனுக்களும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னா் செவித்திறன் குறைவுடையோர் மற்றும் கை, கால் இயக்க குறைபாடு உடையோர், சுய தொழில் புரிந்திடும் வகையில் தலா ரூ.7 ஆயிரம் மதிப்பில் 10 பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், செவித்திறன் குறைவுடையோருக்கு தலா ரூ.3 ஆயிரத்து 500 மதிப்பில் 5 பேருக்கு காதொலி கருவி ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

கோரிக்கைகளை கேட்டறிந்தார்

தொடர்ந்து பல்வேறு நிலை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அது தொடா்பான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை ஆட்சியா்(சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி மற்றும் தாசில்தார்கள், முதுகு தண்டுவடம் காயம் அடைந்தோர் அமைப்பு, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story