ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்துராஜா வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்துராஜா வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x

ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று ராஜா வாய்க்காலில் தண்ணீரை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மதகை திறந்து வைத்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

ராஜா வாய்க்கால் பராமரிப்பு பணி

பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகையணை பகுதியில் இருந்து பாசனத்திற்காக ராஜா வாய்க்கல் பிரிக்கப்பட்டு நன்செய் இடையாறு வரை செல்கிறது. கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் ஆகிய வாய்க்கால்கள் இந்த ராஜா வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால்கள் பாசனத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, மஞ்சள், கோரை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பாசனம் பெற்று வருகிறது.

ராஜா வாய்க்கால் தூர் வாருதல், பராமரிப்பு உள்ளிட்ட பணிக்காக வருடத்தின் 15 நாட்கள் மட்டும் தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் ராஜா வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக கடந்த மாதம் 20-ந் தேதி ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. ராஜா வாய்க்கால் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று மீண்டும் பாசனத்திற்காக ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கலெக்டர் திறந்து வைத்தார்

இந்தநிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர், சேலம் சரபங்கா வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினர். முன்னதாக ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் கட்டப்பட்டுள்ள ராஜா வாய்க்காலை வெட்டிய அல்லாள இளைய நாயகர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ராஜா, கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் வாய்க்கால்களில் நிறைவு பெறாமல் உள்ள ரீமாடலிங் பணிகளை முழுமையாக முடிக்கவும், தண்ணீர் கடைமடைவரை செல்லவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். நிகழ்ச்சியில் சரபங்கா வடிநிலை உட்கோட்ட உதவி பொறியாளர் செந்தில்குமார், பரமத்தி வேலூர் பாசன பிரிவு உதவி பொறியாளர் சுரேகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவி, ஆவின் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகம், ராஜா, பொய்யேரி, கொமராபாளையம், மோகனூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story