கிருஷ்ணா நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


கிருஷ்ணா நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

கிருஷ்ணா நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

திருவள்ளூர்

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். அதன்படி கடந்த 1-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 4-ந்தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. ஆரம்பத்தில் வினாடிக்கு 20 கனஅடி விதம் தண்ணீர் வந்து சேர்ந்தது.

அதன் பின்னர் தண்ணீர் வரத்து அதிகமானது. அதிகபட்சமாக வினாடிக்கு 310 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நதிநீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை வினாடிக்கு 85 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

கிருஷ்ணா நீர்வரத்து குறைந்ததை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 26.55 அடியாக பதிவானது. 1.071 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வினாடிக்கு 85 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story