சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல - அண்ணாமலை


சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல - அண்ணாமலை
x

காங்கிரஸ் கட்சிக்கு ஆளுமை இருந்தால், திமுகவுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை, சுப்ரீம்கோர்ட் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ஐ பயன்படுத்தி நேற்று விடுதலை செய்தது.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைத்தொடர்ந்து, சிறையிலிருக்கும் மற்ற 6 பேரையும் விடுவிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றன.

இந்நிலையில் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "பாஜகவை பொறுத்தவரையில் 7 பேருமே குற்றவாளிகள் தான். காங்கிரஸ் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. சிறையில் இருந்து வெளிவந்தவரை கொண்டாடுவது, வரலாற்றில் தவறான முன்னுதாரணத்தை எடுத்து வைக்கிறது.

நீதிமன்ற உத்தரவில் பேரறிவாளன் நிரபராதி என எங்கும் குறிப்பிடவில்லை, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளனர். நிரபராதியை விடுவித்தது போல முதல்-அமைச்சர், அமைச்சர்கள் நடந்து கொள்கின்றனர். அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு தான் முதல்-அமைச்சராக பதவியேற்றாரா என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு ஆளுமை இருந்தால், திமுகவுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story