நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நாம் மறந்துவிட்டோம்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நாம் மறந்துவிட்டோம்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நாம் மறந்துவிட்டோம் என கவர்னர் ஆர்.என் ரவி பேசினார்.

சென்னை,

கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமிர்த கலச யாத்திரையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

75 ஆண்டுகளுக்கு முன் நாம் சுதந்திரம் பெற்றோம். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவை கொண்டாடி வருகிறோம். சுதந்திர போராட்டம் 1801 ல் இந்த மண்ணில் துவங்கியது, எல்லோரும் கூறுவது போல 1857இல் இல்லை. அதனை நடத்தியவர்கள் மருது சகோதரர்கள். மருது சகோதரர்களை எத்தனை பேர் நினைவில் வைத்து உள்ளோம்.

நாட்டின் சுதந்திரத்திற்காக பல லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நாம் மறந்துவிட்டோம். சுதந்திரத்திற்காக பல்லாயிரக்கணக்கானோர் தமிழக மண்ணில் உயிரை இழந்துள்ளனர். மருது சகோதரர்களும், அவர்களுடன் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களும் கொல்லப்பட்டனர். அவர்களை நாம் மறந்துவிட்டோம்.

இதுபோன்ற தியாகிகளை நினைவுபடுத்தி, அவர்களின் தியாகங்களை போற்றும் வகையில், இரு ஆண்டுகளாக 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகிறோம். சுதந்திர போராட்ட நேரத்தில் இந்தியா முழுவதும் ஒரே குடும்பமாக இருந்தனர். ஆனால் இப்போது சுதந்திரம் கிடைத்தாலும், மதம், இனம், மொழி போன்றவற்றால் இன்று பிரிந்து கிடக்கிறோம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

இன்று நாம் அனைவரும் ஒரே குடும்பமாக ஏன் இருக்க முடியவில்லை ஏன்? ஜாலியன் வாலாபாக் நடைபெற்ற நேரத்தில் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது. காமராஜர் அந்த போராட்டத்தில் பங்கேற்றார். இன்று மொழி அடிப்படையில், மத அடிப்படையில் பிரிந்து உள்ளோம். இதற்காக சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் உயிரை இழக்கவில்லை." இவ்வாறு கவர்னர் பேசினார்.


Next Story