சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம்; மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்


சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம்; மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
x

கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை

கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக சீரடையவில்லை. சென்னை விமான நிலையத்திற்கு வருபவர்கள், விமான பயணிகள் அனைவரும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று, சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள், விமான நிலையத்துக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமுல் படுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணிபவர்கள், சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவைகள் பெருமளவு குறைந்து வருகின்றன.

இதை அடுத்து சென்னை விமான நிலைய நிர்வாகம், பயணிகளை எச்சரிக்கும் விதமாக, சென்னை விமான நிலையம் உள்நாட்டு பணியும் மற்றும் வெளிநாட்டு முனையங்கள் உள்ள பகுதிகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளனர். அதோடு சென்னை விமானநிலைய டுவீட்டா் பக்கத்திலும் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.

கொரோனா வைரஸ் நமது நாட்டில் முழுமையாக நீங்கி விட்டது என்று மத்திய அரசின் சுகாதாரத்துறையிடமிருந்து அறிவிப்பு வரும் வரையில், சென்னை விமான நிலையத்தில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி போன்ற கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.



Next Story