"வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்தவில்லை"- அன்புமணி ராமதாஸ் விளக்கம்


வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்தவில்லை- அன்புமணி ராமதாஸ் விளக்கம்
x
தினத்தந்தி 22 Dec 2023 9:24 AM GMT (Updated: 22 Dec 2023 9:38 AM GMT)

வானிலை ஆய்வு மையம் துல்லியமாகக் கணிக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. இதனால் 2 மாவட்டங்களிலும் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் ஏராளமான மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம், அது தேவை இல்லாத ஒன்று ஆகும். இந்த வானிலை ஆய்வு மையம் செய்கிற வேலையை 5-ம் வகுப்பு மாணவனாலும் செய்ய முடியும். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றுதான் எப்போதும் அறிவிக்கிறது. உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பிருந்த நிலையே தொடருகிறது என்று கூறினார்.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியிருந்த நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- "வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்துவதற்காக எதையும் நான் கூறவில்லை. வானிலை ஆய்வு மையம் துல்லியமாகக் கணிக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம். வெளிநாடுகளில் உள்ளதுபோல் ஏன் நமது வானிலை ஆய்வு மையத்தால் துல்லியமாகக் கணிக்கமுடியவில்லை. இனிவரும் காலங்களில் இன்னும் அதிக மழை, புயல், வெள்ளம் வரும். துல்லியமாக அறிவிக்கும் பட்சத்தில்தான் மக்கள் தங்களை காத்துக்கொள்ள முடியும்." இவ்வாறு அவர் கூறினார்.



Next Story