விநாயகர் சிலையை கரைக்க முயன்ற போது தேனீக்கள் கொட்டியதில் 49 பேர் காயம்


விநாயகர் சிலையை கரைக்க முயன்ற போது  தேனீக்கள் கொட்டியதில் 49 பேர் காயம்
x

விநாயகர் சிலையை கரைக்க முயன்ற போது தேனீக்கள் கொட்டியதில் 49 பேர் காயம் அடைந்தனா்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே விநாயகர் சிலையை கரைக்க முயன்ற போது தேனீக்கள் கொட்டியதில் 49 பேர் காயம் அடைந்தனர்.

விநாயகர் சிலை கரைக்க சென்றனர்

கோபி அருகே உள்ள தங்கமலை கரடு பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கிராம மக்கள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று இரவு இந்த சிலையை கரைப்பதற்காக ஏராளமானோர் வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் தங்கமலை கரடு அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றனர்.

பின்னர் சிறுவர்கள் வேனில் இருக்க பெரியவர்கள் கரையில் இருந்த வேப்பமரத்தை பிடித்து வாய்க்காலுக்குள் விநாயகர் சிலைகளை கரைக்க இறங்க முயன்றனர். அப்போது மரத்தில் இருந்து தேனீக்கள் கூடு மீது எதிர்பாராதவிதமாக ஒருவரது கை பட்டுள்ளது. இதில் கூட்டில் இருந்த தேனீக்கள் கலைந்து அங்கும் இங்குமாக பறந்தது. இதனால் அங்கிருந்த அனைவரும் அலறியடித்து ஓடினார்கள்.

தேனீக்கள் கொட்டியது

தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் தங்கமலைகரட்டை சேர்ந்த மூர்த்தி மகன் சச்சின் (12), கிருஷ்ணகுமார் மகள் ஜோஸ்னா (10), முருகேசன் மகன் சஞ்சய் (15), சீனிவாசன் மகள் சுதிக்ஷனா (3), மூர்த்தி (50), மூர்த்தி மகன் நவீன் (8), பாலமுருகன் (45), பாலமுருகன் மகன் நவனீஸ் (8) உள்பட 49 பேர் காயம் அடைந்தனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேனில் ஏற்றிக்கொண்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சச்சின், ஜோஸ்ணா, சஞ்சய், சுதிக்ஷனா, மூர்த்தி, நவீன், நவனீஸ், பாலமுருகன் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 42 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சிலைகளை கரைக்க முயன்றவர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story