அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளிவரும்..? - புதிய தகவல்


அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளிவரும்..? - புதிய தகவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 19 March 2024 10:27 PM GMT (Updated: 20 March 2024 2:49 AM GMT)

கூட்டணியை விரைந்து முடித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. தனது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடை நிறைவு செய்திருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் கிட்டத்தட்ட கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டது என்றே சொல்லலாம். இன்னும் தொகுதி பங்கீடு மட்டுமே பாக்கி இருக்கிறது.

ஆனால் இந்த தேர்தலை பொறுத்தவரையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் இன்னும் தனது கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்யவில்லை. தொகுதி பங்கீடும் முழுமை பெறவில்லை.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை, நாடாளுமன்ற தேர்தல் ஜுரம் தொற்றிக்கொள்ள தொடங்கியதுமே பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதில் பா.ம.க. 8 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டது. தே.மு.தி.க. 5 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டது. ஆனால் அ.தி.மு.க. இதற்கு ஒத்துக்கொள்ளாததால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.

இந்தநிலையில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சென்றது. தே.மு.தி.க.வுடனும், பா.ஜனதா ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க. முழு முனைப்பாக தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தே.மு.தி.க. தலைமையிடம், அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். பா.ஜனதா கூட்டணிக்கு பா.ம.க. சென்றபிறகு, தே.மு.தி.க.வை எப்படியாவது தக்கவைக்க அ.தி.மு.க. விரும்புகிறது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்க இருக்கும் நிலையில், கூட்டணியை விரைந்து முடிக்க அ.தி.மு.க. முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில் தே.மு.தி.க.வுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதிய தமிழகம் கட்சி மற்றும் இதர கட்சிகளும் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால், கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் முடித்து வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் அ.தி.மு.க. திட்டமிட்டு இருக்கிறது.

ஏற்கனவே அ.தி.மு.க. வரைவு தேர்தல் அறிக்கை எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கூட்டணி - தொகுதி பங்கீடை நிறைவு செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு, தேர்தல் அறிக்கையையை வெளியிட அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. அதன்படி இன்றோ அல்லது நாளையோ அ.தி.மு.க. தனது கூட்டணி குறித்த நிலைப்பாட்டையும், வேட்பாளர் பட்டியலையும் வெளியிடும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story