அடிக்கடி போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்டு கட்சியினர் எங்கு இருக்கிறார்கள்?-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி
தி.மு.க. ஆட்சியில் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு உள்ளது. அடிக்கடி போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்டு கட்சியினர் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார்.
தி.மு.க. ஆட்சியில் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு உள்ளது. அடிக்கடி போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்டு கட்சியினர் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார்.
பொதுக்கூட்டம்
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி அளவில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சிவகங்கை நகர் கழக செயலாளர் என்.எம்.ராஜா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில இலக்கிய அணி அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர் இல்லை என்றால் திராவிட இயக்கமே இல்லை. இன்றைய ஆட்சியின் அவலங்களை சொல்ல முடியாது. சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு என அனைத்து பொருட்களுமே கட்டுக்குள் அடங்காமல் உயர்ந்துவிட்டன. வழக்கமாக இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அடிக்கடி போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்டு கட்சிகள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தற்போது நடப்பது தலைமுறை ஆட்சிதான் நடக்கிறது. திராவிட மாடல் என்றால் குடும்ப அரசியல் தான் என்று தான் தெரிகிறது. தேர்தலின் போது நாங்கள் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 தருவோம் என்றார்கள்.ஆனால் அதை தருவதற்கு நிதி இல்லை என்கிறார்கள்.ஆனால் ரூ.80 கோடி மதிப்பில் பேனா வைக்கப்படும் என்கிறார்கள். தமிழக அரசியலில் எப்போதும் இல்லாத அளவிற்கு கவர்னரை அளவுக்கு அதிகமாக களங்கப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, பழனிசாமி, சிவாஜி, கோபி, சேவியர் தாஸ், முன்னாள் நகர சபை தலைவர் அர்ஜுனன், நகர் அவைத்தலைவர் வி.ஆர்.பாண்டி, யூனியன் துணைத்தலைவர் கேசவன், ஆர்.எம்.எல்.மாரி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டல துணை செயலாளர் தமிழ்செல்வம், முத்துப்பட்டி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கே.பி.முருகன் நன்றி கூறினார்.