சாத்தான்குளம் இரட்டைக்கொலைக்கு யார் காரணம்?- நீதிபதி பரபரப்பு சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலைக்கு யார் காரணம்? என்பது பற்றி நீதிபதி பாரதிதாசன் நேற்று மதுரை கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.
சாத்தான்குளம் இரட்டைக்கொலைக்கு யார் காரணம்? என்பது பற்றி நீதிபதி பாரதிதாசன் நேற்று மதுரை கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.
இரட்டைக்கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர்.
இதுகுறித்து இரட்டைக்கொலை வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. ,இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசாரை கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நீதிபதி ஆஜர்
ஏற்கனவே முக்கிய சாட்சிகளான பெண் போலீஸ்கள் ரேவதி, பியூலா உள்ளிட்டோர் ஆஜராகி, தங்களது சாட்சியங்களை பதிவு செய்து உள்ளனர். இந்தநிலையில் இந்த இரட்டைக்கொலை வழக்கை நீதித்துறை சார்பில் விசாரித்த அப்போதைய கோவில்பட்டி கோர்ட்டு நீதிபதி பாரதிதாசன், வழக்கு நடக்கும் கூடுதல் செசன்சு கோர்ட்டில் நேற்று நீதிபதி தமிழரசி முன்பு ஆஜரானார்.
அவர் நீதிபதியிடம், இந்த கொலை வழக்கில் தனது விசாரணை குறித்து பல்வேறு தகவல்களை சாட்சியங்களாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கும் ஒத்திவைத்தார். இன்றும் நீதிபதி பாரதிதாசன் ஆஜராகி சாட்சியம் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
யார் காரணம்?
நீதிபதி பாரதிதாசன் தற்போது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
அவர் நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது, "சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை-மகனான ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் கடுமையாக தாக்கியதால்தான் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து இறந்தனர். இது எனது விசாரணையின்போது தெரியவந்தது. அவர்களின் இறப்புக்கு போலீசார்தான் காரணம். எனது விசாரணை அறிக்கையிலும் இதை தெளிவுபடுத்தி உள்ளேன்", என அவர் சாட்சியம் அளித்து இருப்பதாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.