காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தில் கால்வாய் வெட்டுவதை நீட்டிப்பு செய்யாதது ஏன்?


காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தில் கால்வாய் வெட்டுவதை நீட்டிப்பு செய்யாதது ஏன்?
x

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுடன், கால்வாய் வெட்டும் பணியை நீட்டிப்பு செய்யாதது ஏன்? என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

புதுக்கோட்டை

மாலை அணிவிப்பு

அ.தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட 52-வது ஆண்டு விழாவையொட்டி புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வலுவோடு, பொலிவோடும் வீறு நடைபோட்டு கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சினையில் குரல் கொடுக்கின்ற இயக்கமாக அ.தி.மு.க. தனது கடமையை செய்து வருகிறது. ஆனால் ஆளும்கட்சி தொடர்ந்து சுணக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

காவிரி-குண்டாறு திட்டம்

கறம்பக்குடி அரசு மருத்துவமனை 24 மணி நேரம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 35 நாட்களுக்கு மேலாக மீட்புகுழு பெயரில் அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை கண்டும், காணாது இருப்பது குறித்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை விளக்க வேண்டும். முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட்டு இந்த பிரச்சினையில் மீட்பு குழுவை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நான் கொண்டு வந்தேன். காவிரி-வைகை-குண்டாறு உபரிநீர் திட்டம் ரூ.14 ஆயிரம் கோடிக்கு திட்டமிட்டு ரூ.7 ஆயிரம் கோடி நிர்வாக அனுமதி அளித்து அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.700 கோடி நிதியை ஒதுக்கினோம். ரூ.140 கோடியில் டெண்டர் வைத்தோம். ஆனால் இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

பல் மருத்துவக்கல்லூரி

இந்த 2½ ஆண்டுகால ஆட்சியில் தி.மு.க. அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காதது ஏன்?. 7 மாவட்ட விவசாயிகளின் கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டும். கால்வாய் வெட்டும் பணியை இன்னும் நீட்டிப்பு செய்யாதது ஏன்? என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரியை குறிப்பிட்ட காலத்திற்குள் திறக்காவிட்டால் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அ.தி.மு.க.வுக்கு வரும் காலம் வசந்த காலமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையா, நகர செயலாளர்கள் சேட்டு, பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story