நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி


நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
x

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

சென்னை பெசன்ட் நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் மகனை மத்திய அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?. வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் கட்சி தொடங்கட்டும். ஓ.பன்னீர்செல்வத்தை தனிப்பட்ட முறையில் யாரும் நீக்கவில்லை, பொதுக்குழுதான் நீக்கியது.

ஓ.பன்னீர்செல்வம் நடத்தியது கட்சி கூட்டமே இல்லை. பண்ரூட்டி ராமச்சந்திரன் பண்பாக பேசக்கூடியவர். அவர் ஏன் ஒருமையில் பேசினார் என தெரியவில்லை. திமுகவின் 'பி' டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. இயங்கி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணிதான் அமையும். அவரது தலைமையை ஏற்றுத்தான் எல்லோரும் வருவார்கள். 1989, 1991-ம் ஆண்டுகளில் ஓ.பி.எஸ். யார் என்று தெரியாது.

1996-லும் கூட அவர் யார் என்று தெரியாது. 2001-ம் ஆண்டுதான் கட்சியில் அவர் யார் என்று தெரிய வந்தது. அதற்கு முன்பு தேனி நகரத்தில் மட்டும்தான் அவரை தெரியும். நான் 1991-ம் ஆண்டே அமைச்சராகி விட்டேன். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கொடியை பயன்படுத்துவது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story